• உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகம் தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுக்கும் - புல்வாமா தாக்குதலுக்கு டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்

    ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயத்தை கசக்கிப் பிழியும் கோர சம்பவம் காஷ்மீரில் நடந்தேறியிருக்கிறது. ஜம்மு–காஷ்மீர் மாநிலம் புல்வாமா தேசிய நெடுஞ்சாலையில், ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி சுப்பிரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சியினையும், ஒற்றுமையும் கண்டு சகித்துக்கொள்ள முடியாத சில அன்னிய சக்திகள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றன. ஆசியக் கண்டத்தின் அமைதிப்பூங்காவாகத் திகழும் இந்தியாவில், பதட்டத்தை ஏற்படுத்தி - அதன்மூலம் பயங்கரவாதத்தை விளைவிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்ட நாள் திட்டமாகும். அதன் கொடூரத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள, சில தீவிரவாத அமைப்புகளை பயன்படுத்திக்கொள்வதும் – வளர்த்துவிடுவதும் அந்நாட்டின் வாடிக்கை. அதன் தொடர்ச்சியாகத்தான் புல்வாமா தாக்குதல் நடந்திருக்கிறது.

    தீவிரவாதம் என்பது இருபக்கமும் கூர் உள்ள ஆயுதம் என்பதை பாகிஸ்தான் உணரும் காலம் வந்துவிட்டதாகவே நினைக்கின்றோம். உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்நாடு, அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். கோழைத்தனமான இந்த தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகம் தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுக்கும். 130 கோடி இந்தியர்களின் தேச உணர்வும் அதனை வென்றெடுக்கும் என்பதனை உறுதியாக நம்பலாம்.