• கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் IJK பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் கண்டனம்

    தொலைக்காட்சிகள் நடத்தும் விவாதங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொள்பவர்கள் தங்கள் கருத்துக்களை அவர்களின் கட்சி அல்லது அமைப்பின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் எடுத்துப் பேசுவது வழக்கமான ஒன்றாகும்.

    அதன்படிதான் நேற்று (09.06.2018) கோவையில் புதிய த​லைமு​றை ​​தொலைக்காட்சியின் சார்பில் நடைபெற்ற விவாத அரங்கில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பினை எடுத்துப் பேசியுள்ளனர். ஜனநாயக முறையில், மாறுபட்ட கருத்துக்களை மறுத்துப் பேசுவது அவர்களுக்கான உரிமை. அதனை வாத - பிரதிவாதங்கள் மூலமே சந்திக்க வேண்டும். அதை விடுத்து வன்முறை போக்கை கையாளுவது கண்டிக்கதக்கதாகும்.

    கோவை விவாத அரங்கில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். இப்போக்கு மக்களாட்சியின் மாண்புக்கு விரோதமாகும். எனவே தமிழக அரசு புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தியாளர் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.