• போக்குவரத்து துறையின் பற்றாக்குறையை சமாளிக்க பேருந்துக் கட்டண உயர்வு நிரந்தரத் தீர்வல்ல. கட்டண உயர்வை குறைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -

     

    கடந்த 19-ம் தேதி (19.01.2018) நள்ளிரவு முதல், கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு தமிழக அரசு உயர்த்திய பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கட்டண உயர்வு என்பது மக்களின் அன்றாட செலவுகளை பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அறிவித்த கட்டண உயர்வு, சாதாரண –சாமானிய மக்களின் நிதிச்சுமையை பெருமளவு கூட்டி, அவர்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு அமைந்துவிட்டது.

     

     

    மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகவும்,அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல்,நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளின் கட்டணம் 25 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 55 சதவீதத்தில் இருந்து 66 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

     

     

    தமிழக அரசின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் - சாதாரண பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், அதிசொகுசு பேருந்துகள், குளிர் சாதன வசதியுள்ள பேருந்துகள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 கோடி பேர் பயணம் செய்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களில் மாதாந்திர ஊதியம் பெறுபவர்கள், சிறு வணிகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பல வகை மக்கள் பயணம் செய்கின்றனர். இக் கட்டண உயர்வு இவர்களின் வாழ்வாதாரத்தையே அசைத்து விட்டது என்றால் அது மிகையல்ல.

     

     

     

    டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கட்டண உயர்வு செய்யப்பட்டதாக  தமிழக அரசு கூறுகின்றது. இக்கட்டண உயர்வு மூலம் 3600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், இதற்கு அப்புறமும் கூட ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.

     

    இதுபோன்ற தொடர் இழப்புகளுக்கு காரணம், போக்குவரத்து துறையில், கீழிருந்து மேல்மட்டம் வரை மலிந்து கிடக்கும் ஊழலும், நிர்வாக சீர்கேடும், அக்கறையற்ற தன்மையுமே ஆகும். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ஒன்பது கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்து வந்த போக்குவரத்துதுறை, 13-வது ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு 12 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்திக்கும் என கூறப்படுகின்றது.

     

    ஆக, அரசுத்துறைகளுக்கே உள்ள பொறுப்பின்மை என்கிற வியாதியை முதலில் குணப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் – அதிகாரிகள் தொடங்கி, ஓட்டுனர்கள், நடத்துனர்கள்,தொழில் நுட்பபணியாளர்கள் என அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். அதை விடுத்து, பற்றாக்குறையை ஈடுகட்ட, கட்டண உயர்வை கொண்டுவருவது என்பது, தீயை அணைக்க, பெட்ரோலை ஊற்றுவது போன்ற முரண்பட்ட செயலாகவே அமையும்.

     

    கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு பேருந்துக்கட்டணங்களை உயர்த்திய போதிலும், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பையும், பற்றாக்குறையையும் ஈடுகட்ட முடியவில்லை. அதே போல் இப்பொழுது உயர்த்தப்பட்ட கட்டண உயர்வாலும், போக்குவரத்து துறையின் பற்றாக்குறையை முற்றிலும் சரிசெய்ய முடியாது. எனவே கட்டண உயர்வு என்பது இதற்கான நிரந்தரத் தீர்வாகாது என இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. அதனால், இக்கட்டண உயர்வை கனிசமான அளவிற்கு குறைப்பதோடு, போக்குவரத்துத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழலை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.