• வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -

   தென்மேற்கு பருவமழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை  நீடித்தது. இந்த நான்கு மாதத்தில் கர்நாடக – கேரள மாநிலங்களில் அதிகளவில் மழை பெய்ததோடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்தது. கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு தென்மேற்கு பருவமழையின்போது, தமிழகத்தில் 31 சதவீதம் அளவிற்கு அதிகமாக மழை பொழிந்தது.

   

   இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இம்மாதம் 26-ம் தேதி முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்றிலிருந்து (27.10.2017) அதற்கான இயற்கைச் சூழ்நிலையும் மழை பொழிவதற்கு ஏதுவாக மாறிவருகிறது. இதனால் தமிழகத்தின் வங்காள விரிகுடா கடலோர மாவட்டங்களில் அதிக அளவிற்கு மழை பொழிவதோடு, கடலோர ஆந்திர பிரதேசம் - ராயலசீமா போன்ற பகுதிகளிலும் மழை பொழியும் எனக்கூறியுள்ளனர்.

   

   கடந்த 2015-ம் ஆண்டு, இதே வடகிழக்கு பருவமழையின்போதுதான், ஒரு நூற்றாண்டில் நாம் சந்தித்திராத பெரும் வெள்ளக்காடினை சென்னை மாநகரம் சந்தித்தது. வரலாறு காணாத வகையில் 53 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாக மழை பொழிந்து, சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு ஏரிகளும், குளங்களும் நிரம்பி உடைப்பெடுத்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, உடைந்துவிடுமோ என்கிற நிலையல் திடீரென ஏரி திறந்துவிடப்பட்டதன் காரணமாக, சென்னையே வெள்ளத்தில் தத்தளித்ததை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் அதற்கடுத்து 2016-ம் ஆண்டில்  62 சதவிகிதம் அளவிற்கு வடகிழக்கு பருவமழையின் அளவு குறைந்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் வறட்சியைச் சந்தித்தன.

   

   

   

   அதேவேளையில், இவ்வாண்டு 89 சதவிகிதத்திலிருந்து 111 சதவிகிதம் அளவிற்கு மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளவேண்டும்.

   

   குறிப்பாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றுதல் – தடுப்பணைகள் மற்றும் ஏரி கண்மாய்களின் மதகுகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை  கடந்த மாதமே துவங்கியிருக்கவேண்டும். எனினும், அவ்வாறு துவங்கப்படாத பகுதிகளில் தமிழக அரசு விரைந்து பணியாற்றி நிலைமையை சீர்செய்யவேண்டும்.

   

   தமழகத்தில்  டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பலநூறு உயிர்களை பலிகொண்ட சோகம் இன்னும் நீங்கவில்லை. டெங்கு காய்ச்சலின் அபாயத்திலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் சேர்ந்துகொண்டால் மிகப்பெரும் சுகாதார சீர்கேடுகளும், தொற்றுநோயும் பரவிவிடுமோ என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் அனைத்து மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அவசரகால மருத்துவ உதவி முகாம்களையும், அதற்குத்தேவையான மருத்துவ உபகரணங்களையும் தமிழக அரசு தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

   

  மேலும் உள்ளாட்சித்துறை – வருவாய்துறை – பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அதிகாரிகளும் – அலுவலர்களும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும். 2015–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேத இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு, தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.