• லாபத்தில் இயங்கும் நெய்வேலி என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்கக்கூடாது - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -

  1956-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  பெருமுயற்சியால் தொடங்கப்பட்ட  நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தினை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் துவக்கிவைத்தார்.அதுமுதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அபாரமான வளர்ச்சியைக் கண்டுவந்தது. இங்கு, பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தல் மற்றும் மின் உற்பத்தி செய்தல் ஆகிய பிரதான தொழில்கள் மூலம், தென்மாநிலங்களின் மின்தேவையை பெருமளவு பூர்த்திசெய்யும் நிறுவனமாக  நெய்வேலி என்.எல்.சி  நிறுவனம் விளங்குகின்றது.

   

  சுமார் 2490 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி  செய்யப்பட்டு, அதில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 980 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகின்றது ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் என ஏறக்குறைய  17 ஆயிரம் பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. 

   

  கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 262 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது இந்நிறுவனத்தின் சாதனையாகும். இந்த அளவிற்கு தொழில் முனைப்போடு இயங்கிவருகின்ற நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பது என மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   

  மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்கள், நடப்பு 2017-18 ஆம் நிதியாண்டிற்கான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை இலக்கை 72 ஆயிரத்து 500 கோடியாக நிர்ணயித்திருக்கிறார். இதில்  என்.எல்.சி நிறுவனத்தின்  5சதவிகித பங்குகளை விற்று, ரூபாய் 800 கோடி நிதி திரட்டுவது எனவும், இந்த நிதியை நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

   

   கடந்த 2009-ம் ஆண்டு 10 சதவிகித பங்குகளை விற்பதென திரு.மன்மோகன்சிங் அவர்களின் தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்தபோது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அந்த 10 சதவிகித என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு போகவிடாமல் தடுத்து, தமிழக அரசே வாங்கிக்கொள்வதென முடிவெடுத்து, அரசின் சார்பில் பங்குகள் வாங்கப்பட்டன என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்

   

  “நிதி ஆயோக்” அமைப்பு, கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரை செய்தது.  அதன்படி நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை இரண்டாகப் பிரித்து, அதில் சில நிறுவனங்களின் பங்குகளை விற்பது எனவும், சில நிறுவனங்களை முற்றிலும் தனியாருக்கு ஒப்படைத்துவிடுவது எனவும் பரிந்துரை செய்திருந்தது. அதே வேளையில்  லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களான ‘நவரத்னா’ என அழைக்கப்படும் சில நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இந்த நவரத்னா என்கிற பட்டியலில் லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் விளங்குகின்றது.  இந்நிலையில்  இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கவேண்டிய அவசியம் என்ன..? 

   

   நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்கள் என்பது அரசு நிதியை அள்ளி விழுங்கும் ‘வெள்ளை யானை’களாக (White Elephant) இருந்தால் அதன் பங்குகளை விற்பது குறித்தோ அல்லது முழுமையாக தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தோ யாருக்கும் ஆட்சேபனை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதென்பது தவறான நடவடிக்கையாகவே கருதப்படும்.

   

  அதுமட்டுமல்லாமல், நெய்வேலி என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாவதோடு, தற்போது அந்நிறுவனம அரசுக்கு வழங்கும் மின்சாரத்திற்கான விலையை உயர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பல நூறு ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழப்பது மட்டுமின்றி, மின் கொள்முதலில் அரசுக்கு மேலும் கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படும். எனவே, இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு,நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை  விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.