• பேனர் வைக்க தடைவிதித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை கட்சி பாகுபாடின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை –

  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் கட்-அவுட், பேனர் ஆகியவை  தவிர்க்கமுடியாத காரணிகளாக உள்ளது.  அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களானாலும் - ஆர்ப்பாட்டங்களானாலும் அல்லது அந்த அரசியல் கட்சி தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளானாலும் அங்கு வைக்கப்படும் பேனர்கள், 
  கட்-அவுட்களால் மிகப்பெரும் போக்குவரத்து இடைஞ்சலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அடைவதை பொதுமக்கள் மிகுந்த வெறுப்புடனும் - எதிர்ப்புடனும்  பார்த்து வருகின்றனர்.

   

  மேலும், அரசு கட்டிடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள பாலங்களின் கைப்பிடிச் சுவர்கள் – தனியார் கட்டிடங்கள் – வீடுகள் ஆகியவற்றிலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டது. இவைகளையெல்லாம் உணர்ந்து – அறிந்து கொண்டதால்தான், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தேவையின்றி பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது எனவும், போக்குவரத்துக்கு இடையூறாகும் வகையில் சுவர் விளம்பரங்களை எழுதக்கூடாது எனவும் நாங்கள் கொள்கை முடிவாகவே வைத்துள்ளோம்.

   

  பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் ஏற்கனவே தடை விதித்திருந்தாலும் கூட, ஆளும்கட்சியின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இந்த தடை உத்தரவு கண்டுகொள்ளப்படுவதில்லை. பிற அரசியல் கட்சிகளும் இப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே கருதுவதில்லை. இதுகுறித்து பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டபோதும், சில சமூக ஆர்வலர்கள் அறவழி போராட்டங்கள் நடத்தியபோதும், அரசும் – பிற அரசியல் கட்சிகளும் இதனை மதிப்பதில்லை.

   

   இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (24.10.2017) வழங்கிய தீர்ப்பு தமிழக மக்களால் பெருமளவு வரவேற்கப்படும் என நினைக்கின்றேன். தனி நபர் தொடுத்த பொதுநல வழக்கின்மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அவர்கள் சிறப்பான ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளார். அத்தீர்ப்பில், “தேவையில்லாமல் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகை சீர்குலைக்கக் கூடாது. பேனர், பிளக்ஸ் போர்டு, சைன் போர்டு போன்றவற்றில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. இதனை மீறி யாரேரும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

   

  அதே வேளையில், இந்த உத்தரவினை செயல்படுத்துகின்ற பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. தமிழக அரசு, தான் சார்ந்த கட்சியின் நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும், இந்த உத்தரவினை கடைபிடித்து  முன்மாதிரியாக விளங்கவேண்டும். ஏனைய பிற அரசியல் கட்சிகளும் இந்த உத்தரவினை மதித்து, தங்களின்  ஜனநாயக கடமைகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.