• தீக்குளிப்பு போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறாதிருக்க பொதுமக்கள் அளிக்கும் புகார்மனுக்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் –

  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்கானிப்பதோடு தனி மனிதர்களுக்குமான பாதுகாப்பினையும் உறுதி செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் காவல் துறையினருக்கு உண்டு.  வலியவர்கள்,  எளியவர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக இருந்து செயல்படக்கூடியவர்களாக காவல் துறையினர் இருக்கவேண்டும். பொறுப்புணர்வு மிக்க காவல் துறையினர் தங்கள் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குகிறார்களோ என்கிற ஐயம், சமீப காலங்களாக தமிழக மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதற்கு வலுவூட்டும் விதமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவத்தை குறிப்பிடலாம்.

   

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கந்துவட்டிக்காரரின் கொடுமை தாளாமல் இசக்கிமுத்து என்பவர் தன் குடும்பத்துடன் தீயிட்டுக்கொண்டதும், இதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்ததும், கந்துவட்டிக்கு பணம் வாங்கிய இசக்கிமுத்து பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதுவுமான சம்பவம் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியது.

  ஏற்கனவே பலமுறை  கந்து வட்டிக்காரரின்  கொடுமை குறித்து காவல் துறையினரிடம் இவர்கள் புகார் அளித்துள்ளனர்.  ஐந்து முறைக்கு மேல் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனுவும் அளித்துள்ளனர். எனினும், காவல் துறையும் – மாவட்ட ஆடசியர் அலுவலகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இவர்கள் இக்கொடூரமான முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

   

  இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசி முடித்ததும் மேடைக்கு முன்பாகவே, மாமியார் –மருமகள் இரண்டுபேரும் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். பொதுமக்களும், காவல் துறையினரும் உரிய நேரத்தில் தடுத்ததால் அங்கு ஏற்படவிருந்த துயர சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.

   

  மேலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக தங்கள் வீட்டிற்கும் – விவசாயத்திற்கும் – தறி பட்டறை அமைப்பதற்கும் மின் இணைப்புக் கேட்டு மனு கொடுத்த்தாகவும், அதன்மீது மின்சார வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்தாகவும் கூறியுள்ளனர்.

   

  இதேபோல், ஈரோடு மாவட்டத்தில், கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தை அடைக்க முடியாததால், கிட்னி விற்றாவது பணம் கட்டவேண்டும் என சூரம்பட்டியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி ரவி என்பவரை கந்துவட்டிக்காரர் மிரட்டியுள்ளார். 5 லட்சம் ரூபாய்க்கு கிட்னியை விலைபேசிய கந்துவட்டி கும்பல், அவரை கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  இதனை அறிந்துகொண்ட அவரின் மனைவி சம்பூர்ணம் என்பவர், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் மருத்துவமனையிலிருந்து ரவி மீட்கப்பட்டுள்ளார். ஆக தொடர்ந்துவரும் இதுபோன்ற செய்திகளெல்லாம் காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கையே  எடுத்துக்காட்டுகின்றன.

   

  கடந்த 2003-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட‘கந்துவட்டி தடுப்புச் சட்டம்’ வெறும் ஏட்டளவிலேயே இருக்கிறது என்பது நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேரிட்ட தீக்குளிப்பு சம்பவத்தின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. மீட்டர் வட்டி – மாதவட்டி –கந்துவட்டி – நாள்வட்டி போன்ற பெயர்களில் வசூலிக்கப்படும் வட்டிக் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் கந்து வட்டி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் அச்சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதால்தான் இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

   

  எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறாதிருக்க, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள்மீது காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் உரிய நடைவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அது ஒன்றே இதற்கான தீர்வாக அமையும் என்பதனை  வலியுறுத்த விரும்புகின்றேன்.