• “நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை நடுநிலையுடன் கையாள்வார் என எதிர்பார்க்கின்றோம்” தமிழக புதிய ஆளுநருக்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

  கடந்த 2016ம் ஆண்டு திரு.ரோசையா அவர்கள் தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றது முதல், இது வரை தமிழகத்திற்கென நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமலேயே இருந்துவந்தது. திரு. வித்யாசாகர் ராவ் அவர்கள் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் வகித்து வந்த நேரத்தில் தான், முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், ஆளும் அ இ அ தி மு க விற்குள் பிளவு என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பாரா அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. .

  ஆளும் கட்சியில் ஏற்பட்டுவிட்ட உள்கட்சி பிரச்சனைகளால், தமிழக அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலையும், அரசு நிர்வாகத்தில் தெளிவில்லாத போக்கும் காணப்படுவதை நாம் அறிவோம். பல முடிவுகள் ஆளுநரின் வருகைக்காக காத்திருந்து, அதனால் தேவையற்ற பதற்றங்கள் ஏற்பட்டதையும் சமீபகாலமாக மக்கள் பார்த்துவந்தனர். இக்காரணங்களால், தமிழகத்திற்கென ஒரு நிரந்தர ஆளுநர் தேவை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவந்தன.

  இந்நிலையில், தமிழக ஆளுநராக திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பன்வாரிலால் அவர்கள், நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அசாம், மேகாலயா மாநிலங்களின் ஆளுநராகவும் இருந்து திறம்பட பணியாற்றியுள்ளவர். எனவே, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந் நெருக்கடியான சூழ்நிலையை நடுநிலையுடன் கையாண்டு, தனக்கான பொறுப்புகளை திறமையுடன் எதிர்கொள்வார் என்கிற நம்பிக்கையுடன், புதிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு, இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர்

  நிறுவனர் தலைவர் - IJK