• தியாகங்களின் மூலமே மனித குலம் மாண்புறும் எனும் உண்மையை உணர்த்துவதே பக்ரித் திருநாளாகும் - டாக்டர் பாரிவேந்தர் பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள்

    பக்ரித் பண்டிகை எனும் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இறை தூதராக அறியப்பட்ட இப்ராகிம் அவர்கள் இறைவன் ஒருவனே எனக் கூறி தான் கண்ட உண்மைகளை மக்களுக்கு போதித்து வந்தார்.

    நீண்ட நாள் குழந்தையின்றி கவலைப்பட்டு வந்த இப்ராகிம் அவர்கள், இறைவனிடம் வேண்டி – இஸ்மாயில் எனும் மகனை பெற்றார். இறைதூதர் இப்ராகிம் அவர்கள், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுகிறாரா? என்பதை அறிய, “உன் மகன் இஸ்மாயிலை வெட்டிப் பலியிட வேண்டும்” என இப்ராகிமின் கனவில் கடவுள் கட்டளையிடுகிறார். அதனை ஏற்றுக்கொண்ட இப்ராகிம், தன் மகன் இஸ்மாயிலின் தலையை கத்தியால் வெட்ட முற்படுகிறார்.

    அவரின் உண்மையான இறைபற்றையும் - தியாகத்தையும் ஏற்றுக்கொண்ட இறைவன், அவரின் மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கூறினார் என பக்ரித் திருநாள் பற்றிய வரலாறு கூறுகிறது. ஆக, மனித குலத்தின் அத்துணை மாண்புகளும், தியாகங்களின் மூலமே நிறுவப்படும் என்பதை இச்சம்பவம் உணர்த்துவதாக நாம் அறியலாம். அதே தியாக உணர்வுடன் பக்ரித் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் என் இதயமார்ந்த நல்வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.