• ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் மூலம் இந்திய வர்த்தகத் துறை மிகப்பெரும் வளர்ச்சியடையும் - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

  இந்தியா சுதந்திரமடைந்தது முதல் சுமார் 70 ஆண்டுகளாக, ஒரே பொருளுக்கு பல்வேறு கட்டங்களாக வரிவிதிப்பு முறை நடைமுறையில் இருந்தது. இதேபோல், மாநிலத்திற்கு மாநிலம் வரிவிதிப்பு முறையில் ஏற்றத் தாழ்வுகளும் இருந்தது. இதனால் பொருட்களின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. மேலும், உற்பத்தி வரி - சேவை வரி - விற்பனை வரி - சுங்க வரி - கலால் வரி - வாட் வரி என பல்வேறு வரிவிதிப்புகளால் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

  இதனைக் கருத்தில் கொண்டுநாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தினால் அது வியாபாரிகளுக்கு மிக எளிதாக இருக்கும் எனவும்மாநிலத்திற்கு மாநிலம் பொருட்களின் விலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடும் எனவும் பல பொருளாதார நிபுணர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில்பொருள் மற்றும் சேவை வரி  திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

  இதற்காக 17 முறை கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில், 1200 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை நிர்ணயம் செய்தது. இந்த பொருட்கள் அனைத்தும் முறையே 5,12,18,28 ஆகிய சதவிகிதங்களில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது.இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் எளிமையான நடைமுறையினை கையாளுவதற்கு ஏற்றவாறு இவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  1986-ம் ஆண்டில் பிரதமராக இருந்த திரு.ராஜீவ் காந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கருத்துரு பெற்ற இவ்வரிவிதிப்பு முறை, 2001-ம் ஆண்டில் திரு.வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மசோதாவாக்கப்பட்டது. பின்னர் திரு.மன்மோகன்சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இதிலுள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்து வந்ததன் காரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

  2014-ம் ஆண்டில் திரு.நரேந்திரமோடி அவர்கள் பிரதமரானவுடன் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புமுறையை கொண்டுவரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவின் அனைத்து முதல்வர்களுடனும் பேசி, இவ்வரி விதிப்பு குறித்த ஐயங்களை நீக்கினார். அதன் பயனாக இன்று முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

  நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நள்ளிரவு உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், ‘500 மண்டலங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே தேசமாக வல்லபாய் பட்டேல் அவர்கள் ஒன்றிணைத்தார்அந்த வரலாற்று சாதனைக்கு ஈடாக பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடக்கும் வரிவிதிப்பு முறையை நாம் ஒன்றிணைத்திருக்கிறோம்’ என்று பேசியதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இதுதான் இந்திய வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையின் யதார்த்த நிலை. அவ்வகையில், இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் மூலம் இந்திய வர்த்தகத் துறை, எதிர்காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சியடையும் என்கின்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது.

  எனவே, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள பொருள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்பதுடன், இடைவிடா முயற்சியின் மூலம் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.