• அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்ட மாற்றங்கள் உட்பட தமிழக அரசின் கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர வேண்டும் -டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

    கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தேக்க நிலையில் இருந்த தமிழக அரசின் கல்வித்துறை, தற்போது முன்னோக்கிய பாய்ச்சலில் அடியெடுத்து வைத்திருப்பது பாராட்டுக்குறியதாகும். குறிப்பாக 11-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது மிகுந்த பயனுள்ள அறிவிப்பு. இதன் மூலம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேனிலைக் கல்விக்காக பதினொன்றாம் வகுப்பில் சேருகிறார்கள். அங்கு, அரசுப் பள்ளிகளில் மட்டுமே 11-ம் வகுப்பிற்கான பாடங்கள் நடத்தப்பட்டு, ஆண்டு இறுதித் தேர்வும் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிக் கூடங்களில், 11-ம் வகுப்பிற்கான பாடங்கள் நடத்தப்படுவது இல்லை. நேரடியாகவே 12-ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டு, சம்பிரதாயத்திற்காக 11-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    இதனால், அரசு பள்ளி மாணவர்கள் 12-ம் வகுப்பு பாடத்தை ஒரு ஆண்டும் – தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகளும் பயிலக் கூடிய நிலை ஏற்படுகிறது. இதில் சமவாய்ப்பு என்கிற இயற்கைத்தத்துவம் செயல்படுத்தப்படுவதில்லை. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்கிற அறிவிப்பின் மூலம், மேனிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியாக நம்பலாம்.

    10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து பொதுத்தேர்வு நடத்தப் படுவதால், மாணவர்களின் கற்கும்திறன் குறையும் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்களின் மூளைத்திறன் எளிதில் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், தொடர் தேர்வு மூலமான சோர்வு நிலை மாணவர்களுக்கு ஏற்படாது.

    மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது என்கிற தமிழக அரசின் முடிவு உள்ளபடியே வரவேற்கக்கூடிய ஒன்றாகும். 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், கடந்த 7 ஆண்டுகளாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் கடந்த 12 ஆண்டுகளாகவும் மாற்றி அமைக்கப்படாமல் அப்படியே தொடர்கின்றன. இதனால் தற்போதைய தேசிய கல்வி நீரோட்டத்திலிருந்து தமிழக மாணவர்கள் தனித்துவிடப்படுகின்றனர். 

    இதனால் தான் “‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்கிற கோரிக்கை எழுந்தது இது நம்முடைய பலவீனத்தினால் எழுந்த கோரிக்கையாகும். காரணம் 12 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவிலேயே, மேனிலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் இருப்பதால், நவீன கல்வி அறிவோடு முன்னேறிவரும்  பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை. 

    அதனால்தான், குறைந்த பட்சம் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்காவது பாடத்திட்டத்தை மாற்றுங்கள் என பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தோம். எனினும் தமிழக ஆட்சியாளர்கள் அதனை செவிமடுக்கவில்லை. தற்போது அனைத்து பள்ளி வகுப்புகளுக்குமான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்கிற அரசாணையின் மூலம், ‘நீட்’ உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள் என நம்பலாம்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை ‘ரேங்கிங்’ வரிசையிலேயே வெளியிடப்பட்டு வந்தன. “மாநிலத்திலேயே முதலிடம் - மாவட்டத்திலேயே முதலிடம்” என மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை மையப்படுத்தி, கல்வி நிறுவனங்கள் தங்களை விளம்பரப்பத்திக் கொண்டன.

    இதனால், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை போன்ற ஆபத்தான முடிவுகளின் மூலம், பல ஆயிரம் மாணவர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, மனநல மருத்துவர்களும் – கல்வியாளர்களும் இந்த ‘ரேங்கிங்’ முறையை மாற்றி, ‘கிரேடு’ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டு முதலே ‘கிரேடு’ முறை அமலுக்கு வந்திருப்பதை பாராட்டுகிறோம்.

    இதேபோல், பத்தாயிரம் பள்ளிக் கூடங்களை தேர்வு செய்து அங்கு கழிப்பிடங்கள் அமைக்கப்படும் எனவும், சீருடைகள் மாற்றி அமைக்கப்படும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் IAS, IPS தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் மாவட்ட நூலகங்களில் புதிய நூல்கள் வாங்கி வைக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் காலத்தே கைக்கொள்ளப்பட்ட கவைக்குதவும் திட்டங்களாகும்.

    அதேவேளையில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்துடன் கணினி பாடமும் சேர்க்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு பதிலாக கணினி அறிவியலை தனிப் பாடமாகவே கொண்டு வந்து,  இதற்கான மதிப்பெண்ணும் மேற்படிபிற்கான தகுதிசார் மதிப்பெண்களுடன் சேர்க்கப்படவேண்டும். 

    இளங்கலை கணினி அறிவியல் (BCA) பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் கல்வியியல் கல்லூரியில் (B.Ed) சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கலந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், பி.எட்., முடித்த பி.சி.ஏ., பட்டதாரிகள் ஆசிரியர் பணியின்றி பல ஆயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனர். காரணம் தொடக்கக்கல்வி வகுப்புகளில் அதாவது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை, கணினி பாடம் சேர்க்கப்படாததுதான். இதுபோன்ற கோரிக்கைகளையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்ட மாற்றம் உட்பட கல்வி சீர்த்திருத்தங்கள் அனைத்தையும் தொய்வின்றி தொடர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.