• குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண மாவட்ட அளவில் தன்னார்வ ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவேண்டும் - தமிழக அரசுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து கோரிக்கை

    கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் பெய்திருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தால், பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டே காணப்படுகின்றன. கடந்த ஆண்டு மழையின் அளவு சராசரியாக 68 சதவீதம் அளவிற்கு குறைவாக பெய்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக மக்கள் தங்கள் குடிநீருக்காக நாள் கணக்கில் காத்துக்கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றுதான் குடிநீரை ஒரு குடமோ, இரண்டு குடமோ கொண்டுவரக்கூடிய பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    காரணம், கடந்த 2016-ம் ஆண்டின் வறட்சி இந்த ஆண்டும் தொடருவதுதான் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் அதிக வெப்ப ஆண்டாக 2016-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. 1901-ம் ஆண்டிற்கு பின்னர் தமிழகம் காணும் கடுமையான வறட்சி ஆண்டாக இவ்வாண்டு இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 16,800-க்கும் அதிகமான ஊராட்சிகளில் எங்கெங்கே குடிநீர்பஞ்சம் மிகக்கடுமையாக உள்ளது என்பதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல போதிய வசதிகள் இல்லை. இதனால்தான் ஆங்காங்கே சாலைமறியல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடல், காலிப் பானைகளுடன் பெண்கள் போராட்டம் என, மக்களின் எதிர்பார்ப்புகள் - எதிர்ப்புகளாக வெளிப்படுகின்றன.

    தற்போது, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால், ஏரி – குளம் - கண்மாய் ஆகியவற்றின் குடிமராமத்து குழுக்களும், ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என அரசு சார்புடையவர்களையும் இக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

    மேலும், மாவட்ட அளவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, குடிநீர் பராமரிப்பை கண்காணிக்கவும், குடிநீர் பற்றாக்குறை நிலவும் கிராமங்களை கண்டறியவும், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் - கிடைக்கும் தண்ணீரை முறையாகவும் – சிக்கனமாகவும் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்குழுக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ள தமிழக மக்களை மீட்கவும், கால்நடைகளை காக்கவும் இது போன்ற தன்னார்வ குழுக்கள் பேருதவியாக இருக்கும் என்பதால், தமிழக அரசு இது குறித்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.