• தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 3 -ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு - IJK தலைவர் ரவிபச்சமுத்து அறிக்கை

    கடந்த 20 நாட்களாக டெல்லி  ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய – மாநில அரசுகள் கனிவுடன் பரிசீலிக்கும் என பல்வேறு விவசாய சங்க அமைப்புகளைச் சார்ந்தவர்கள் நம்பி இருந்ததைப்போல நாமும் நம்பியிருந்தோம்.  ஆனால் இதுவரை எந்த சாதகமான பதிலும் மத்திய அரசிடமிருந்தோ – மாநில அரசிடமிருந்தோ கிடைக்கவில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தொகையை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் திரு.அய்யாக்கண்ணு அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். அவரை கடந்த மாதம் 28-ம் தேதி (செவ்வாய்கிழமை) இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நேரில் சந்தித்து நம் கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

    இதேபோல், தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், விவசாய சங்கங்களின் தலைவர்களும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை சந்தித்துபேசி ஆதரிவு தெரிவித்து வருகின்றனர். எனினும் மத்திய – மாநில அரசுகள் குறைந்தபட்சம் அவர்களை இதுவரை பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை.

    விவசாயிகளின் மீதான இந்த அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும் வகையில் வரும்  3-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர் சங்கங்களின் சார்பிலும் அன்று கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் இந்திய ஜனநாயக கட்சியும் கலந்துகொண்டு, இப்போராட்டத்திற்கு  முழு ஆதரவினை வழங்கும் என தெரிவித்துக்கொள்கின்றேன். இப்போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின், மாநில – மாவட்ட – நகர - ஒன்றிய - பேரூர் பொறுப்பாளர்களும், துணை அமைப்பினைச் சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.