• லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மத்திய – மாநில அரசுகளுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து கோரிக்கை

    தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் (30.03.2017) காலவரையறையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தென்னிந்தியாவில் உள்ள சுமார் 9 லட்சம் லாரிகள் உட்பட 18 சரக்கு லட்சம் வாகனங்களும், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் சரக்கு வாகனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தமிழகத்தில் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபெறுகின்றன.

    லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் மீது மத்திய - மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தி இந்த வேலை நிறுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில், தென்னிந்தியா முழுவதுமுள்ள தரைவழி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் காய்கறி மற்றும் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள், கட்டுமானப் பொருட்கள், தொழில் உற்பத்தி மூலப்பொருள்கள், விற்பனை பொருட்கள் என மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேங்கிவிடும். இதனால் விலைவாசி உயர்வதோடு, கருப்பு சந்தைக்காரர்களால் பொருட்கள் பதுக்கி வைக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

    தென்னிந்திய லாரி உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக இன்சூரன்ஸ் தொகை - டீசல் மீதான வரி - வாகன பதிவுக்கட்டணம் ஆகியவற்றை குறைப்பது, 80 கிலோ மீட்டர் வேகத்திற்கும் குறைவாக செல்லும் பழைய வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகள் அனைத்தும் மத்திய – மாநில அரசுகள் சம்மந்தப்பட்டவையாக உள்ளன.

    லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக,மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என தெரிகிறது. இதே போல், டீசல் விற்பனை மீது உயர்த்திய வாட்வரி மற்றும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் வசூலிக்கப்படும் பதிவுக்கட்டணம் ஆகியவை பற்றி தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

    தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுவதை வைத்துப்பார்த்தால், இந்த வேலை நிறுத்தம் சம்மந்தமாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சரோ, மூத்த அதிகாரிகளோ அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.