• ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 174 தமிழர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் - ஆந்திர அரசுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

    நேற்று (09.03.2017) ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திற்குட்பட்ட சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக கூறி 16 தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், குக்கல்தொட்டி, ரெயில்வே கோடூர், வங்கமல்லா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 174 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு, திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர வனத்துறை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதனையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை விடுவிப்பதாகவும், அவர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் ஆந்திர அரசு அறிவித்தது. எனினும், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை.

    இந்நிலையில், நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 174 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் இன்னும் ஆந்திர வனப்பகுதியிலேயே அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட தமிழர்களை குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூட நடத்தாமல் கால்நடைகளைப்போல் அடைத்து வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.   

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செம்மரங்களை வெட்டுகிறார்கள் என்றால், வெட்டப்பட்ட செம்மரங்களை எங்கே கொண்டு செல்கிறார்கள்? யார் அதனை வாங்குகிறார்கள் என துப்பறிந்து, அவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்..? கடத்தல் முதலைகளிடம் மென்மையான போக்கினை கையாளும் ஆந்திர அரசு, சாதாரண தமிழர்கள் மீது வன்முறையை கையாள்வது என்ன வகையில் நியாயம்..?

    எனவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 174 பேர் யார் யார், அவர்கள் எந்தப் பகுதியினைச் சேர்ந்தவர்கள்? எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்..? என்கிற விவரத்தினை ஆந்திர அரசு உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும், ஆந்திர வனப்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை, எந்த ஆபத்தும் இன்றி மீட்டுக்கொண்டு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.