• மக்கள் பிரச்சனைக்காக போராடிய பெரம்பலூர் மாவட்ட ஐஜேகே நிர்வாகியை நள்ளிரவில் கைது செய்வதா..? பெரம்பலூர் நகர காவல்துறையினருக்கு ரவிபச்சமுத்து கண்டனம்

  பெரம்பலூர் மாவட்டம்  அம்மாபாளையம் கிராமத்தில் கூட்டுறவு  நியாயவிலை கடை ஒன்று இயங்கிவருகிறது. இக்கடையில் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனக்  கூறப்படுகிறது.

  இதனை உணவு வழங்கல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில், பொதுமக்களைத் திரட்டி நேற்று (செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவதென, இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட வேந்தர் பேரவை செயலாளர் திரு.ராஜா அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் 6-ம் தேதி (திங்கள்கிழமை) அம்மாபாளையம் கிராம பொது மக்களிடம் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த நிலையில், நள்ளிரவு சுமார் 2 மணியளவில், அம்மாபாளையம் கிராமத்திலுள்ள திரு.ராஜா அவர்களின் வீட்டிற்கு,  பெரம்பலூர்  நகர காவல் ஆய்வாளர்  தலைமையில்  போலீசார் வந்துள்ளனர்.

  அந்த இரவு நேரத்தில் திரு.ராஜா அவர்களின் வீட்டு கதவைத் தட்டி அவரை வெளியே அழைத்து, “உங்களை கைது செய்ய போகிறோம்” எனக் கூறியுள்ளனர். அதற்கு அவர், “ஏன் என்னை கைது செய்யப்போகிறீர்கள்” எனக் கேட்டதற்கு, “கூட்டுறவு கடையில் உணவு பொருள்கள் வழங்கப்படுவதில்லை  எனக் கூறி, நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கேள்விப்பட்டோம். இதற்கு நாங்கள் அனுமதி தர முடியாது” எனக் கூறியுள்ளனர். அதற்கு திரு ராஜா அவர்கள், “நான் முறையாக ஊர் மக்களிடம் அறிவித்துவிட்டுத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

  அவரின் இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத காவல் துறையினர், இரவோடு இரவாக அவரை பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதனை அறிந்த இந்திய ஜனநாயக கட்சியின் மாநில – மாவட்ட நிர்வாகிகள் காவல் ஆய்வாளரிடம் பேசியதை அடுத்து, இன்று (புதன்கிழமை) காலை அவரை எச்சரித்து, “நாங்கள் எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும்” என எழுதி வாங்கிக்கொண்டு அவரை விடுவித்துள்ளனர்.

  மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து, ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்பது வழக்கமான  அரசியல் நடவடிக்கையாகும். இதை ஏதோ சட்ட விரோதமான அல்லது தீவிரவாத நடவடிக்கையைப்போல் கருதிக்கொண்டு காவல் துறையினர் திரு.ராஜா அவர்களின் வீட்டிற்கு சென்று நள்ளிரவில் அவரை கைதுசெய்வதாக கூறி மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

  மேலும், அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்போவதாகவும் பெரம்பலூர் நகர காவல் துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவரை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையினர் இதுபோல் செயல்படக்கூடாது எனக்கூறி, திரு.ராஜா அவர்களின் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டுமென பெரம்பலூர்  நகர காவல் துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.