• தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும் -IJK தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

    தமிழகத்தில் பாயும் ஜீவநதியாக விளங்குவது தாமிரபரணி நதியாகும். இந்த நதியின் நீர் ஆதாரத்தை நம்பி நெல்லை, தூத்துக்குடி உட்பட  அண்டை மாவட்டங்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்கே போதிய நீர் கிடைக்காத நிலையில், தனியார் தொழிற்சாலைகளும் – குளிர்பான நிறுவனங்களும் தாமிரபரணி ஆற்றினை குறிவைத்து இங்கு தங்களின் தொழிலை தொடங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் குளிர்பான நிறுவனம், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினசரி 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதியளித்தது. எனினும் சுமார் 96 லட்சம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் உறிஞ்சப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதன் அடிப்படையில், அந்த தனியார் குளிர்பான நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நதிக் கரையினை ஒட்டி 8 அணைகளும், 11 கால்வாய்களும் செல்கின்றன. எனினும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும், வாய்ககால்களில் செடிகொடிகள் அடர்ந்து படர்ந்து கிடப்பதாலும் போதிய தண்ணீரை சேமிக்க முடியவில்லை எனவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையெல்லாம் கருத்தில் கொண்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை , தனியார் குளிர்பான நிறுவனம் தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து, அந்த தனியார் குளிர்பான நிறுவனம் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், தண்ணீர் எடுக்க தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு அப்பகுதியைச் சேர்ந்த மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், இத்தீர்ப்பு விவசாயிகளுக்கு மேலும் பேரிடியாக இறங்கியுள்ளது.

    எனவே, விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை கருத்தில் கொண்டும் தாமிரபரணி ஆற்றின் நீரை தனியார் நிறுவனங்கள் எடுக்காமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். அதன்படி மதுரை உயர்நீதிமன்றத்தீர்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்மேறையீடு செய்யவதுடன், ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் தண்ணீரை எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.