• ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்கு 'ஐ.ஜே.கே. உறுதுணையாக இருக்கும்' - செயல் தலைவர் ரவி பச்சமுத்து உறுதி

  ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று கட்சியின் செயல்தலைவர் ரவிபச்சமுத்து குறிப்பிட்டுள்ளார். 

  ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக அறிக்கையொன்றை இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல்தலைவரான ரவிபச்சமுத்து வெளியிட்டுள்ளார். 

  தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிகட்டு நடத்துவது என்பது பெரும் சிக்கலாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள ரவிபச்சமுத்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி எதிர்பார்த்துகாத்திருக்க வேண்டிய துரதிருஷ்டமான சூழல் காரணமாக, இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  தடைகளைத் தாண்டி பொங்கலின் போதே ஆங்காங்கே ஜல்லிக்கட்டுகள் நடைபெற்ற நிலையில், பொங்கலுக்குப் பிறகு அனைத்தும் ஓய்ந்துவிடும் என்றே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் கருதினர் என்று குறிப்பிட்டுள்ள செயல்தலைவர் ரவிபச்சமுத்து.

  ஆனால் பொங்கலுக்குப் பிறகும் தன் எழுச்சியாக அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை வரை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் போராடத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

  தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்த போதிலும் மிகவும் அமைதியான முறையில் ஆனால் உறுதியான வழியில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பல்வேறு நிலைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ரவிபச்சமுத்து வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் கட்டவிழ்த்து விடப்படும் வரை போராட்டத்தை தொடர்வதில் இளைஞர்கள், மாணவர்கள் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளதோடு. அவர்கள் பாதுகாப்பாகவும் பொதுமக்களுக்கு இடையுறு இன்றியும் நடந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளர்.

  போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி உறுதுணையாக நிற்கும் என்பதுடன், தேவையான உதவிகளையும் செய்யும் என்றும் செயல்தலைவர் ரவிபச்சமுத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் மாணவர்களும், இளைஞர்களும் போராடிக் கொண்டிருக்கும் களங்களில் இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ள ரவிபச்சமுத்து இளைஞர்களின் உறுதியான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய – மாநில அரசாங்கங்கள் ஒட்டுமொத்த தமிழர்களின், இளைஞர்களின் ஒற்றுமையை கருத்தில் கொண்டாவது. அவர்கள் எதிர்பாக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு எப்படியாவது அனுமதி தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.