• தமிழ்வழி பொறியியல் பாடத்திட்டம் மூலம் கிராமப்புற மாணவர்களின் தேர்வு விகிதம் கூடும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி தனியார் சுயநிதி கல்லூரி என மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 லட்சம் மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். அவற்றில் 50 சதவீதத்திற்கு மேல் கிராமப்புற மாணவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

    கடந்த 2014–ம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (AICTE) வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் மட்டும் செயல்படும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகளில் ஏறக்குறைய 51 சதவீதம் பேர் BE(இளம் பொறியியல்) B.Tech (இளம் தொழில் நுட்பவியல்) படிப்புகளில் தோல்வியடைந்துள்ளனர் என்றும், பொறியியல் படிப்பிற்கான மாணவர்களின் சேர்க்கையானது 49 சதவீதமாக குறைந்துவிட்டது எனவும் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பள்ளித் தேர்வில் எளிதில் வெற்றிபெறும் மாணவர்களால் பொறியியல்கல்லூரி தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு பெரிதும் காரணம் ஆங்கில வழியில் கற்பிக்கும் முறையே என கூறப்பட்டது. மாணவர்கள் அவரவர்களின் தாய் மொழிகளில் கற்றால் மட்டுமே நன்கு புரிந்து படிப்பதுடன்,அறிவு சார்ந்து சிந்திக்கும் திறனும் பெற முடியும். எனவே தமிழிலும் பொறியியல் பாடபுத்தகம் தேவை என நீண்டநாட்களாக இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை வைத்து போராடியுள்ளன.

    பொறியியல் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நிர்வாகம் – ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்களிடத்தில் கருத்துகளை பெற்று அதனை மத்திய அரசிற்கு தெரிவித்தது.

    அதன் அடிப்படியில் தற்போது நடைமுறையில் உள்ள ஆங்கில வழி பாடம் கற்பிக்கும் முறையை மாற்றி, இனி தமிழிலும் பொறியியல் பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கூடும் என எதிர்பார்க்கலாம். சிறப்பு வாய்ந்த இந்த அறிவிப்பினை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கின்றோம்.