• பருவகாலத்திற்கு ஏற்ப ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரயில் பெட்டிகளை கண்காணிக்கும் தொழில்நுட்பம் வேண்டும் - மத்திய அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    உத்தரபிரதேசம் மாநிலம் – கான்பூரிலிருந்து 88 கி.மீ தொலைவிலுள்ள புக்ரான் எனுமிடத்தில் கடந்த ஞாயிறு அதிகாலை 3.00 மணியளவில் பாட்னா – இந்தூர் விரைவு ரயிலின் 17 பெட்டிகள் தலைகீழாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை ஏறக்குறைய 133 பேர் இறந்துள்ளதாகவும் – நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் – துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ஏறக்குறைய 64 ஆயிரம் கிலோ மீட்டரை கொண்டு உலகின் மிக அதிக தூரம் கொண்டது இந்திய ரயில்வே. தினமும் சுமார் 2 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.  பாதுகாப்பு – வேகம் – சேவை என்ற மூன்று முக்கிய காரணங்களுக்காகவும் – சாலை பயண விபத்து – நேரம் அதிகரிப்பு ஆகிய காரணத்திற்காகவுமே  அனைத்துத் தரப்பு மக்களும் ரயில்  பயணத்தை தேர்நதெடுக்கின்றனர். ஆனால் அதிலும் கோரவிபத்துக்கள் ஏற்பட்டு பலர் கொல்லப்படுவதால், ரயில் பயணத்தை மக்கள் வெறுக்கும் சூழல் ஏற்படும்.

    கடந்த 2009 முதல் 2015 வரை நடந்த ரயில் விபத்துக்களில் 315 முறை ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் – 80 சதவீத விபத்துக்கள் மனித தவறுகளால்தான் ஏற்படுகின்றது எனவும் – இதுவரை நடந்த கோர விபத்துக்களில் ஏறக்குறைய 28 ஆயிரம்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது விபத்துக்குள்ளான அதிவிரைவு ரயில் புறப்படும்போதே அதன் சக்கரங்களிலிருந்து வித்தியாசமான முறையில் அதிக சத்தம் வருவதாக பயணிகள் புகார் தெரிவித்தும், அதனை முறையாக ரயில்வே பணியாளர்கள் சரிசெய்யவில்லை எனவும், அதுவும் இந்த விபத்து நடக்க ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ந்துவரும் இந்தியாவில் மக்கள் தங்களின் பயணத்திற்கும் – வர்த்தகத்திற்கும் ரயில் போக்குவரத்தையே அதிகமாக சார்ந்திருக்கும் சூழல் நிலவுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமலிருக்க பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அனைத்து ரயில் தண்டவாளங்களையும், ரயில் பெட்டிகளில் உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளையும் மிக தெளிவாக கண்காணித்து – பராமரிக்கும் தொழில்நுட்பம் வேண்டும்.

    மேலும், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று தொழில்நுட்ப அறிவுகொண்ட இளைஞர்களைக் கொண்டு “தண்டவாள பாதுகாப்பு படை”  என்பதை உருவாக்கி, அனைத்து தண்டவாளங்களின் தன்மையை உறுதிசெய்வதுடன் புல்லட் ரெயிலை இயக்கும் நாடுகளில் உள்ளதைப் போன்று அனைத்து ரயில்  நிலையங்களிலும் ரயிலை முழுமையாக பரிசோதிக்க ஸ்கேன் கருவிகளையும் நிறுவி, மக்களின் ரயில் போக்குவரத்தையும் – பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.