• நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஐஜேகே ஆதரவு தரும் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    கடந்த  5-ம் தேதி காவேரியிலிருந்து – தமிழகத்திற்கு, கர்நாடக அரசு 15ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது.

    கர்நாடகாவிலுள்ள பெங்களூர் – மைசூர் – மாண்டியா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன், 50–க்கும் மேற்பட்ட பஸ்கள், 90-க்கும் மேற்பட்ட லாரிகள் எரிக்கப்பட்டன. மேலும், 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் அங்குள்ள தமிழர்களின் வணிக வளாகங்கள் – ஓட்டல்கள் – பெட்ரோல் பங்குகள் – பள்ளிகள் உள்ளிட்டவைகளின் மீது கல்வீசி தாக்கப்பட்டது.  இதன் காரணமாக ஏறக்குறைய 900 கோடிக்கும் மேல் தமிழர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு. வேல்முருகன்  அவர்களும், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. பி.ஆர் பாண்டியன் அவர்களும் என்னை தொடர்பு கொண்டு முழு அடைப்பிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க நேற்று (14.09.2016)சென்னையில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியும் பங்கேற்றது.

    அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நாளை (16.09.2016) தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கடையடைப்பு – உண்ணாவிரதம் உள்ளிட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய ஜனநாயகக் கட்சி தனது முழு ஆதரவையும் – பங்களிப்பையும் கொடுக்கும்.

    எனவே, இப்போராட்டத்தில் கட்சியின் தோழர்களும், மகளிர் அணியினரும் பெரும் அளவில் கலந்துகொண்டு இம்முழு அடைப்பு போராட்டத்தை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.