Election Manifesto 2016 (தேர்தல் அறிக்கை 2016)

இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையை டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டார்

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியானது 45 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதன் வேட்பாளர்களை ஏற்கனவே டாக்டர் பாரிவேந்தர் அறிவித்துள்ள நிலையில் 25.04.2016 அன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் செயல் தலைவர் – ரவிபச்சமுத்து, தலைவர் – கோவைத்தம்பி, பொதுச்செயலாளர் – P. ஜெயசீலன், தலைமைநிலையச் செயலாளர் - A.R. ரங்கபாஷ்யம் உள்ளிட்ட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நல்லவர் கைகளில் நாளைய தமிழகம்..!
IJK தேர்தல் அறிக்கை

இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல், பொருளாதார மேம்பாடுகளுக்காக பல்வேறு கட்சிகள் தொடர்ந்து பாடுபட்டு வந்தாலும், முழுமையாக அந்த இலக்கை இன்னும் சென்றடையவில்லை. நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் முடிந்த பின்னும், கல்வி, மருத்துவம், கிராம வளர்ச்சி, மகளிருக்கான உரிமைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றில் முழுமை பெறாத அளவிலேயே உள்ளோம்.

குறிப்பாக, தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழ்நிலைக்கே மாறுபட்டதாக உள்ளது. குறிப்பிட்ட சில தலைவர்களின் ஆதிக்கம், லஞ்சம் – ஊழல், நிர்வாக சீர்கேடு, (தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத) உடனடி பலன் தரக்கூடிய வாக்கு வங்கியை மையப்படுத்தியே இலவச திட்டங்கள் போன்றவற்றிலேயே கவனம் செலுத்தும் ஆட்சியாளர்களின் கைகளில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை என்பது, என்றைக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் உருவானதோ அன்று முதல் இன்று வரை ஒரு மாறுபட்ட தன்மையை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.

அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் தொட்டு நிர்வாகச்சீர்கேடு, ஊழல், அரசியல் கட்சிகளின் அதிகாரம் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவல், லஞ்சம் பெறுதல், படிப்படியாக இலவசங்களை அறிமுகப்படுத்துதல் என ஒரு மாறுபட்ட சூழலுக்கு மக்களைக் கொண்டு வந்துவிட்டனர்.

இப்படி தேசிய அரசியலும், மாநில அரசியலும் சீர்குலைந்து போயுள்ள இக்காலக்கட்டத்தில், நல்லதொரு அரசியல் வழிகாட்டுதலையும் நேர்மையான நிர்வாகத்தையும் வழங்கவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.

கட்சி தொடங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாகவே 2011 சட்டமன்ற தேர்தலில் சுமார் 120 தொகுதிகளில் இந்திய ஜனநாயக் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இதனை அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும், 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெருமளவில் பெற்றது.

அனைத்து வகைகளிலும் தமிழகத்தை தலைகுனியும் அளவிற்குக் கொண்டு வந்த திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியம் எனப் பெரும்பான்மை தமிழ்மக்களும் முடிவு செய்துவிட்டனர். அவர்கள் “மாற்று அரசியல்” தேவை என அதற்கான அரசியல் கட்சியைத் தேடும் நிலையில் உள்ளனர். விரல்விட்டு எண்ணிடும் அளவில், சில கட்சிகளே அவர்களின் எண்ணங்களை செயல்படுத்திடும் கட்சிகளாக உள்ளன. அவற்றில் முதல் இடத்தில் இருப்பது “இந்திய ஜனநாயகக் கட்சி” எனில் எவரும் ஏற்பர். டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சி மக்களைச் சிந்திக்கத் தூண்டி, அதன் வழியே மனமயக்கம் இல்லாத, தெளிவான நிலையில், அரசியல் கட்சிகளின் உண்மை நிலையை அறியவைப்பதை தலையாய பணியாய்க் கொண்டுள்ளது.

படித்தவர்கள், இளைஞர்கள், மகளிர் என இவர்களின் மனிதத்திறன்கள் அனைத்தும், சரியான வகையில் வெளிக்கொணரப்படுவதற்கான திட்டங்களை மையப்படுத்தி இந்திய ஜனநாயகக் கட்சி செயல்படத் துவங்கியுள்ளது.

தமிழக அரசியலில் தனது தனித்தன்மையை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்நாட்டின் நலன்கருதி செயல்படப் போவதை, தனது தேர்தல் அறிக்கையின் மூலம் தெளிவுபடக் கூறவிரும்புகிறது.

“சொல்லுதல் யார்க்கும் எளியது, ஆனால் சொல்லிய வண்ணம் செய்தல் எளிதானதல்ல” என்பதையும் பொய்ப்பித்தவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்.

கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தமக்குச் சொந்தமான SRM கல்வி நிறுவனங்கள் வாயிலாக உயர்கல்விப் படிப்பிற்கென ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாகவும், சலுகைக் கட்டணங்களின் வழியாகவும் உதவி வருவதை உலகே அறியும்.

SRM மருத்துவமனை வாயிலாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் – சாதாரண நோய்கள் முதல் – மிகப்பெரிய நவீன அறுவைச்சிகிச்சை வரை ஆண்டிற்கு பல கோடி ரூபாய் செலவில் இலவசமாகப் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வர வழிகாட்டி வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் வீசிய ‘தானே‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள், உணவு, உடை மற்றும் அம்மாவட்டத்தில் இருந்து SRM கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் ரத்து என ரூ.7 கோடிக்கும் மேல் உதவி செய்த வள்ளல் தன்மையை எவரும் மறக்கமாட்டார்கள்.

சென்னை – காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 2015 டிசம்பரில் பெருவெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கியதை நாடே அறியுமே..!

அத்தகைய தொண்டு உள்ளமும் தூய எண்ணமும் படைத்த ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் கட்சி – எதிர்காலத் தமிழகத்தின் ஏற்றம் கருதி, சட்டப் பேரவைக்குச் சென்று தமது குறிக்கோளை நிறைவேற்றிட மக்களின் பேராதரவை எதிர்பார்க்கின்றது.

ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்திடுவோம் என்பதைத் தேர்தல் அறிக்கை வாயிலாகத் தெளிவுப்படுத்துகின்றது இந்திய ஜனநாயகக் கட்சி.

 • பள்ளிப் பொதுத் தேர்வுகள் சீர்திருத்தம் :
  • தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பலலட்சம் மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
  • மிகுந்த நம்பிக்கையோடு தங்களது எதிர்காலக் கனவுகளை சுமந்துகொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வுமுடிவுகள் வெளியானதும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையென்றாலோ, அல்லது தோல்வி ஏற்பட்டாலோ தற்கொலை செய்துகொள்ளும் அவநிலை அதிகரித்து வருகின்றது. இது அவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வாழ்நாள் முழுவதும் சோகத்தையும் ஏற்படுத்துகின்றது.
  • இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முறைகள் முற்றிலுமாக கைவிடப்பட்டு அதற்கு பதிலாக ஆண்டு முழுவதும் நடைபெறும் மாதத்தேர்வுகள் மற்றும் பருவத்தேர்வுகள் ஆகியவற்றிக்கு ஒவ்வொன்றுக்கும் 10 அல்லது 20 மதிப்பெண்கள் அளித்து ஒரு மாணவன் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கொண்ட மதிப்பீட்டு சான்றிதழ் (Evaluation Certificate) மட்டுமே வழங்கப்படும்.
  • தொடர் மதிப்பீடாக இம்முறையில் பெறும் “மதிப்பெண்கள்” அல்லது “கிரேடுகள்” அடிப்படையில் மாணவர்களை உயர்கல்விக்கோ அல்லது பணியில் அமர்த்திக்கொள்வதோ அந்தந்த கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விருப்பத்திற்கு விடப்படும்.
 • பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு உறுதி – மற்றும் அனைத்து கட்டிடங்களும் சோலார் திட்டத்தை நிறைவேற்றி சுய மின்சேவையைப் பெற்றிட மத்திய மாநில அரசு மானியங்களுடன் கூடிய நீண்ட நாள் கடன் திட்டம் செயல்படுத்துதல்.
 • இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவசமாக விடுதியில் தங்கிப் பயிலும், மாணவர்களுக்கான பராமரிப்புச் செலவினை இருமடங்காக உயர்த்துதல்.
 • எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் – அவர்களின் தனித்திறன்கள் வெளிப்பாடு குறைபாட்டால் – நேர்காணல்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உள்ளது. அவர்களுக்குத் தனிப்பயிற்சி பட்டறைகள் அமைத்து அவர்களின் பன்முகத் தன்மையை வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

மேற்கண்ட முயற்சியை மத்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் வாயிலாக ஏற்பாடு செய்தல்.

 • மாநில மக்களுக்கான உணவு பொருட்களின் தேவைகளை கணக்கீட்டு அவ்வப்போது (பருவகாலத்திற்குஏற்ப) என்னப் பயிர், எவ்வளவு பரப்பளவில் பயிரிடவேண்டும் அதற்கு என்ன உதவி வழங்க வேண்டும் என்பதோடு. விளைபொருட்களுக்கான விலையை (உற்பத்தி செலவோடு குறைந்து 50% லாபம் வைத்து) நிர்ணயம் செய்து, விவசாயத்தையும் ஒரு தொழில் என அறிவித்து செயல்படுவோம்.
 • விவசாயிகளுக்குத் தேவையான, உரம், பூச்சிமருந்துகள் போன்ற விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வகை செய்தல்.
 • பயிர்காப்பீடு (இன்சூரன்ஸ்) மிகஎளிதாக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்படும்.
 • நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் சிறிய பெரிய ஆறுகளில் நடுவே தடுப்பணைகள் கட்டப்படும் இதன் மூலம் கடலில் சென்று கலக்கும் மழை நீர் தடுத்து நிறுத்தப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகைசெய்யப்படும்.
 • விளை பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க, விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்டத்திற்கு ஒன்றாக குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அமைத்திட மத்திய அரசின் மூலம் ஏற்பாடு செய்தல். விவசாயத்திற்கு நவீன உபகரணங்களை அரசே வாங்கி, அதனை மிக குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும்.
 • மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 2 விவசாய கல்லூரிகள் அமைத்தல்.

முதற் கட்டமாக விவசாயிகள் தமிழகத்தில் பாசன வசதி பெற்று வறட்சியில்லாமல் விவசாயம் செய்திட மாநில நதிகளை ஒன்றிணைத்தல்.

நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேறும் வரை, விவசாயம் தொடர்ந்து நடைபெற ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்திட, மத்திய மாநில அரசுகள் பெரிய நடுத்தர விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் நீண்டகாலத் தவணையில் குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் – குறுவிவசாயிகளுக்கு 75 % மானியத்துடன் கடன் வழங்குதலுக்கு ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசை வற்புறுத்துதல்.

வங்கிகளில் கடன் பெற்று, விளைச்சல் வருமானம் இல்லாமல் கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகளின் நிலைமைகளை நேரில் அறிய வங்கிக்கிளை அதிகாரி ஒருவருடன் கூடிய, ஆய்வுக் குழுவை ஒன்றியங்கள் தோறும் அமைத்து – அவர்கள் ஆய்வின் மூலம் – கடனைத் திரும்பச் செலுத்த இயலாதவர்களைக் கண்டறிந்து அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்தல்.

விவசாயத்தைக் கவனித்து உரிய யோசனைகள் வழங்கிட அரசால் நியமிக்கப்பட்டுள்ள விவசாய விரிவாக்க அலுவலர்களின் பணியைப் பார்வையிட பறக்கும் படை அமைத்தல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதுடன் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 250 என உயர்த்தி வழங்கப்படும். மேலும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள், அவர்களின் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு நில உரிமையாளர்கள் ரூபாய் 100-ம், அரசின் சார்ப்பில் ரூபாய் 150-ம் என சேர்த்து ரூபாய் 250 தினகூலியாக வழங்கப்படும்.

தூய்மையான குடிநீர் அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்க ஏற்பாடு செய்தல், அன்றாடம் சேரும் குப்பைகளைச் சேகரித்து, மக்கும் குப்பைகள் - மக்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி மறுசுழற்சி முறையால் மாற்று உபயோகத்திற்கும், உரம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தல்.

சுகாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் சுற்றுப்புறத் தூய்மையைக் கண்காணிக்க ஒன்றியத்திற்கு 5 ஊழியர்களை சுகாதார உதவியாளர்களாக நியமித்தல்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கேற்ப – நோயில்லா வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க மருத்துவமனை கிளைகளை 5 கிராமங்களுக்கு ஒன்று என்று நிறுவி – நடமாடும் மருத்துவக்குழுக்கள் வந்து சேர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

நோய்கள் பரவுவதற்கான காரணங்களைக் கூறி, வருமுன் காத்தல் அடிப்படையில் விழிப்புணர்வு பரப்புரைகள் செய்தல்.

மாவட்டத்திற்கு ஒரு “எய்ம்ஸ்“ மருத்துவமனை அமைக்க மத்திய அரசை வற்புறுத்துதல் – அல்லது மாநிலத்திற்கு குறைந்தது 20 இடங்களிலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசை வற்புறுத்துதல்.

விபத்துக்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஒவ்வொரு வட்டத்திலும் விபத்துச்சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் அமைத்தல். அதுபோல் அரசு நடத்தும் ஆரம்ப சுகாதர நிலையம் முதல் அரசு பொது மருத்துவமனை வரை அனைத்தும் முற்றிலுமாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கென 24 மணி நேரமும் நோயாளிகளை பராமரிக்க பகுதி நேர அடிப்படையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

நாடு சுகதந்திரம் அடையும் முன் அரசின் வருவாயை அதிகப்படுத்த சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடையை ஆங்கிலேயர்கள் திறந்தார்கள். அப்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் “மது” அருந்த வேண்டுமென அரசு “பர்மிட்” கொடுத்தது. அவர்கள் மட்டுமே குடிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மதுக்கடைகள் இருக்க வேண்டுமெனவும் சட்டம் நடைமுறையில் இருந்தது.

மூதறிஞர் ராஜாஜி தொடங்கி ஜெயலலிதா வரை பல்வேறு காலகட்டங்களில் மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தினாலும், கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசின் “டாஸ்மாக்” நிறுவனம் மூலம் அரசே நேரடியாக மதுவை விற்க தொடங்கியது.

சுமார் 6,000க்கு மேற்பட்ட மதுக்கடைகள் மூலம் ஆண்டிற்க்கு சுமார் 23 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டியது. வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்காலத்தை சிதைத்தும் – இளம் விதவைகளுக்கு காரணமாகவும், கொலை - கொள்ளை உள்ளீட்ட சமூக சீரழிவுக்கு மூலகாரணமாகவும் உள்ள மதுவை முற்றிலுமாக ஒழிப்பதுடன்

மதுவை விற்பதும் – வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் இருந்து மதுவை இறக்குமதி செய்வதற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுவதுடன் “மதுவிலக்கு கட்டாய” சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்படும். மேலும் மது விற்பது தெரியவந்தால் விற்பவர்களின் மீதும் அதனை வாங்கிப் பருகுவர்களின் மீதும் கொடுஞ்செயல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வரை பிணையில் வெளிவர முடியாத தண்டனை வழங்கப்படும்.

இரண்டுமுறை மட்டுமே வாய்ப்பு :

ஒவ்வொரு தேர்தலிலும் தனிநபரோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களோ தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுவதும் – அதிகார பலனை அனுபவித்து ஊழல் செய்யும் அவலநிலை நிலவுகின்றது. இதன் காரணமாக அனைவருக்கும் பரவலாக ஜனநாயகம் மறுக்கப்படுவதுடன் – தேர்தலில் போட்டியிடத் திறமையான, நேர்மையானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதனைப்போக்கும் விதத்திலும், அரசியலில் பங்கு எடுக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதத்திலும் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு இரண்டுமுறைக்குமேல் இந்திய ஜனநாயகக் கட்சியில் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.

ரசாயண உரங்களுக்கு மாற்றாக – இயற்கையில் கிடைக்கும் மரம் செடி, கொடி ஆகியவற்றுடன் சேர்த்து கால்நடைக் கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சியும், போதிய நிதியுதவியும் வழங்கப்படும்.

மேலும் இயற்கை வேளாண்மைக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படுவதுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் “ஐயா நம்மாழ்வார்” பெயரில் இயற்கை வேளாண்மை பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்படும்.

எரி வாயு எடுக்கத் தடை

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் மூலம் தனியார் நிறுனங்கள் தமிழக விவசாயிகளை நசுக்கும் நோக்கில் விவசாயநிலங்களைப் பாழ்படுத்தி பலஆயிரம் அடி துளையிட்டு, அதற்குள் தடைசெய்யப்பட்ட ரசாயணக் கலவைகளை செலுத்தி அதன் மூலம் எடுக்கப்படும் “மீத்தேன்”, “ஷெல்” போன்ற பலவிதமான எரிவாயு எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக ரத்துசெய்யப்படும். மேலும் விவசாய நிலங்களை நாசப்படுத்துவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவுசெய்யப்படும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களின் கல்வி, தகுதிக்கு ஏற்ப உலகின் பல நாடுகளில் இருபால் தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் கட்டுமானம் – மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலத்தில் இவர்களுக்கு முறையான ஊதியமும் – நிரந்தர வேலையும் வழங்கப்படாமலும் உணவு – உடை – இருப்பிடம் – போன்றவற்றையும் வழங்காமல் கொடுமையாக துன்புறுத்தப்படுவதுடன் பலர் சிறைப்பட்டு சித்திரவதை செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிறைப்பட்டவர்களை வாதாடி மீட்டெடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களை வறுமையில் இருந்து காத்திடவும் புதிதாக “அயல்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம்” உருவாக்கப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் வேலை மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரைத் தேக்கி வைக்கவும் – கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் விதத்திலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி – குளம் – கண்மாய்கள் அனைத்து வருடத்திற்கு இருமுறை தூர் வாரப்பட்டு, பாதுகாத்து பராமரிக்கப்படும். மேலும் விவசாயத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் தமிழக முழுவதும் பல நூறு ஏரி – குளம் – கண்மாய்கள் புதியதாக உருவாக்கப்பட்டு அதன் கரையோரங்களில் காற்றை சுத்திகரிக்கும் வேப்பமரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்படுவதுடன் ஏரி – குளம் – கண்மாய்களை சேதப்படுத்தினாலோ அல்லது மண் எடுத்தாலோ கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

லஞ்சத்தை ஒழிக்க ஒரு துறையே தனியே செயல்பட்டாலும் – அதன் நிலைப்பாடு மிகவும் இளைப்புடனேயே உள்ளது.

லஞ்சத்தை ஒழித்திட மாநிலங்கள் அளவில் ‘லோக் ஆயுக்தா‘ சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். லஞ்சம் பெறுபவர் எவராயினும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்னும் நிலையை உறுதியாக எடுத்தல்.

அண்டை மாநிலங்களின் எல்லை பிரச்சனைகள், நதிநீர் வழக்குகள் இவைகளைத் தீர்த்திட, இரு மாநில ஆட்சியாளர்களும் மனம் விட்டுப்பேசித் தீர்த்திடும் நோக்கில் மாநில முதலமைச்சர்கள், அல்லது மாநில அமைச்சர்கள் நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்துதல்.

தேவைப்படும் பொழுது மட்டும் மத்திய அரசின் உதவியை நாடுதல் – இயன்றவரை வழக்குகளுக்காக நீதி மன்றம் செல்வதை தவிர்த்தல்.

புலம் பெயர்ந்து வந்து “அகதிகளாகத்” தமிழகத்தில் உள்ளவர்களை அவர்கள் தாயகம் திரும்பும் வரையில் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாய் (அரசுவிதிப்படி விலக்கப்பட்டவைகள் நீங்கலாக) வாழ்ந்திட உத்திரவாதம் அளித்தல்.

உலக அளவில் நடைபெறும் ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பங்கு பெற்று உயர்ந்த இடத்தை நமது தமிழர்களும் பிடித்திட வேண்டும் எனும் நோக்கில், அனைத்து கிராமங்களிலும் விளையாட்டுப் பயிற்சி மையங்களை அமைத்து தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குதல். மேலும் தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டுகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படுவதுடன் விளையாட்டின் முக்கியத்துவத்தினை பள்ளி - கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்ப்பதுடன் “திறன் மேம்பாட்டு திட்டம்” கட்டாயப்படுத்தப்படும்

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் – சுற்றுலாதளங்கள் ஆகியவற்றை பாதுகாத்து பாராமரிப்பதுடன் பண்டிகையின்போது பல்வேறு ஊர்களில் நடத்தப்படும் “ஜல்லிக்கட்டு” – “சேவல்” சண்டை உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளைத் தடையின்றி நடத்த வழிவகைசெய்யப்படும்.

அதுபோல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாதளங்களை பார்வையிடவும் தமிழர்களின் கலை – கலாச்சாரம் – பண்பு பழக்கவழக்கத்தின் மூலம் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளை காண வருகைதரும் வெளிநாட்டினர் அனைவரும் தங்கி மீண்டும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்லும்வரை உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

மேலும் நலிவடைந்துள்ள திரைப்பட, நாடகக் கலைஞர்களுக்கு என, தனி நிதியம் ஒன்று ஏற்படுத்தி, அவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க ஆவண செய்தல்.

குறிப்பு :

நடிகர் மற்றும் இயக்குனர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரைப்பட, நாடகக் கலைஞர்களுக்கும், இலவச மருத்துவ வசதிக்கான அனுமதியை SRM மருத்துவமனை வழங்கிவருகிறது.

FEFSI (Film Employee’s federation of south India) அமைப்பில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐ.ஜே.கே. சார்பில் SRM மருத்துவமனை மூலம் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த நவீன நூலகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று அமைக்கப்படும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மாணவ, மாணவியர் குறைகளைக் கண்டு கேட்டறிய மாணவ முகவர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் அனைத்து குறைகளும் களையப்படும்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் ஒவ்வொரு ஆண்டும் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பெற்று ஒவ்வொரு துறையிலும் 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் “அகில இந்திய சுற்றுலா” செல்ல ஏற்பாடு செய்தல்.

ஒன்றிய பேரூராட்சிகள் தோறும் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படும். குழந்தைகளுக்கென தனியே “நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம்” கொண்டுவரப்படும்.

உலகத்தரம் வாய்ந்த “பன்னாட்டுப்பள்ளி” ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு பதவிகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட அறிக்கையில் கண்டுள்ளவைகள் மட்டுமின்றி நடைமுறையில் மக்களின் தேவை அறிந்து அவைகளைச் செயல்படுத்த இந்திய ஜனநாயகக் கட்சி ஆயத்த நிலையில் உள்ளது.

கோவில்களில் அரசியல் சார்பற்ற, பக்தியில் ஈடுபாடு காட்டும் நல்லவர்களை ஊர்பொது மக்கள் கருத்துக் கேட்பு அடிப்படையில் அறங்காவலர்களாக நியமித்தல்.

வீணாகக் கிடக்கும் அரசு புறம்போகு தரிசு நிலங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயனுள்ள “வருவாய் தரும் பூமியாக” மாற்றுதல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க – அரசாங்கமே மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் அல்லது மண்டலங்களாக மாவட்டங்களை இணைத்து (Men Power Corporation) தனி அலுவலகத்தை அமைத்துச் செயல்படுத்துதல்.

எளியவர்களுக்கும் நீதி கிடைக்க நடமாடும் கிராமநல நீதிமன்றங்களை அமைத்து மக்களின் மத்தியில் அமைதியை நிலை நாட்டுதல்.

ஜாதி – மத – இன வேறுபாடுகள் அற்ற சமுதாயம் அமைந்திட “சமய நல்லிணக்க வாரியம்” ஒன்று அமைத்தல்.

மணல் கொள்ளை, கனிமவளங்களைச் சுரண்டுதல் போன்றவற்றைத் தடுத்து, வருவாயைப் பெருக்க கனிமவள மண் பாதுகாப்புக்கென உள்ள தனித்துறைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்.

உயர்கல்வியில் மாணவர்களை சுயதொழில் – சுயவேலையின் பக்கம் ஈர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள், புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும்.

கல்வியை முடித்ததும் மாணவர்கள் தங்கள் திறமை, விருப்பம் ஆகியவற்றிற்கும் ஏற்ப தொழில் மூலம் உடனடியாக பொருளீட்ட வசதி செய்து தரப்படும். இதற்கு தேவையான தொழில் நுட்ப மற்றும் பொருளாதார வழிகாட்டல் அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி செயல்பட தூண்டும் குறிக்கோள் கொண்ட “ஆணையம்” ஒன்றை அமைத்து, இதை அரசின் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக வடிதெடுத்து செயல்படுத்தி வேலையில்லாத இளைஞர்களே இல்லையென்றே நிலை கொண்டுவரப்படும்.

உயர்கல்வியில் ஆராய்ச்சிக்கு மிகமிக முக்கியத்துவம் அளித்து, அதற்காக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மத்திய அரசுடன் இணைந்து போதிய நிதிஉதவியும் – ஆய்வுகூடங்களும் - பொது நூலகமும் - அதிநவீன தொழில் நுட்பம் அடங்கிய கணிணியும் வழங்கப்படுவதுடன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் உலகளவில் வெளியிடப்பட்டு மற்ற நாடுகளோடு போட்டி போடும் வகையில் நமது ஆராய்ச்சி துறை மேம்படுத்தப்படுவதுடன் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்து விளங்கிய விஞ்ஞானிகளின் பெயரில் விருதுகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் ஆராய்ச்சியை முழுவதும் நம்நாட்டிற்கே பயன்படுத்தவும் புதிய கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள தலைசிறந்த ஆராய்ச்சி கூடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தேர்தல் சீர்திருத்தங்கள்
 • ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் இரண்டு முறைக்குமேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கபடமாட்டாது.
 • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் நிறைவைத்தரவில்லை எனில் மக்கள் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அவரைப் பதவியிலிருந்து விலகச்செய்தல்.
 • இடைத்தேர்தல் என்று வருகிற சூழ்நிலை ஏற்பட்டால் அந்தத் தொகுதியில் எந்தக்கட்சி உறுப்பினர் அந்தப் பதவியில் இருந்தாரோ, அதே கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமனம் செய்திட வாய்ப்பளித்து வீண் செலவுகள் – வீணான பிரச்சனைகளைத் தவிர்த்திட ஆவணசெய்தல்.
 • செய்தித் துறையை மேம்படுத்த – அரசு விளம்பரங்களை அனைத்து செய்தித்தாள்களுக்கும் வேறுபாடுகாட்டாமல் பதிவேற்ற வகை செய்தல்.
 • சிற்றிதழ்கள் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்.
 • நூல் நிலையங்களைப் பராமரிக்க நடமாடும் நூலக ஆய்வு ஊர்திகளை மாவட்டத்திற்கு ஒன்று அமைத்தல்.
 • தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சி கருதி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு என்று தனிவாகன வசதி அளித்து – அந்தந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு தமிழ் அறிஞர்களைத் தேர்வு செய்து மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரிவரை தமிழுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை ஆராய வழிவகைசெய்யப்படுவதுடன். பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோர்க்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
 • போலியான பொருட்கள், நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் என தனி மனித நலனைச் சீரழிக்கும் வகையிலான எந்தப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுவதை தடை செய்தல் - அந்த விளம்பரங்களில் கலந்து கொள்ளும் “சமூக மரியாதை” உடையவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தல்.
 • விளம்பரம் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் ஆய்வு செய்திட ஒரு தனி “ஆய்வுக்கூடம்” நிறுவுதல்.
 • அயலகத் தமிழர்கள் நலன்களைக் கவனிப்பதற்கென்றே தனி நடவடிக்கைக் குழுவை நியமித்தல்.
 • தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் என்ற நிலைப்பாட்டில் வைத்து – உரிய அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாக மீன்பிடிக்க உதவி செய்தல்.
 • சோலார் வசதியுடன் கூடிய மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்க மானியங்களை அறிவித்து மின்பற்றாக்குறையைச் சரிசெய்தல்.
 • காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை அறவே ஒழித்தல்.
 • பெண் காவலர்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவரவும் – அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்படாமல் அவர்கள் பணியாற்றிட உரிய ஆலோசனைகள் வழங்கிட உயர்மட்ட ஆலோசனை குழுவை அமைத்தல். பெண்காவலர்கள் பொதுப்பணிகளுக்காக இரவு நேரப்பணிகளிலிருந்து விடுபட வழிசெய்தல்.
 • வேலையில் சேருவோர் B.C.D குரூப்களில் பணியில் அமர்த்தப்பட மத்திய அரசு அறிவித்துள்ளது போல் மாநில அரசும் நேர்முகத்தேர்வை ரத்துசெய்தல்.
 • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழ் மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்த “சித்த மருத்துவம்” மருத்துவமனையுடன் கூடிய அனைத்து சித்த சான்றிதழ் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு என சித்த மருத்துவ கல்லூரி துவங்கிட ஆவணசெய்தல்.
 • இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து – உலகிற்கு உதவிடும் வகையில் கண்டுபிடிப்புகளுக்கு “காப்புரிமை” கிடைத்திடவும் பயன்பாட்டுக்கு அந்தக் கண்டுபிடிப்பைக் காலம் தாழ்த்தாமல் கொண்டுவரவும் அரசே முழுமுயற்சி செய்தல்.
 • விவசாய நிலங்களையும், நீராதாரங்களையும் பாதிக்கும் எந்தவிதமான எண்ணெய் – எரிவாயு திட்டங்களுக்கும் ஆதரவு தராமல் – விவசாய நிலங்களைப் பாதுகாத்தல்.
 • மாம்பழவிளைச்சல் உள்ள பகுதிகளில் மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை – மல்லிகை சாகுபடி அதிகம் உள்ள பகுதிகளில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்கப்படும்.
 • மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் தொகுதியில் “மீன்பிடித்துறைமுகம்” அமைக்கப்படும்.
 • மாவட்டம் தோறும் பத்திரிகை ஆசிரியர்கள், அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று தனியே அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்படும்.
 • வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு 50 விழுக்காடு சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும் எனும் “வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன்” அறிக்கைப்படி விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
 • உணவு கொள்முதலில் இந்தியாவில் தனித்தனி மண்டலமாக முன்பு இருந்துபோல், மீண்டும் அமைத்து நெல் கொள்முதல் மூலம் மாநிலங்களின் விற்பனை சந்தையை சீர்படுத்த ஆவண செய்யப்படும்.
 • பொதுத்துறை வங்கிகளின் வியாபாரக் கடன்களை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் உதவியைப் பெற்று அடியாட்கள் கொண்டு வசூல் செய்யும் நிலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதைத் தடுத்திட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 • நாட்டின் நீராதாரத்தை அழிக்கும் கருவேலங் காடுகளை முற்றிலும் அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும். சிறு தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த மாவட்டத்திற்கு ஒரு விற்பனை மையம் அமைக்கப்படும்.

மேற்கண்ட திட்டங்களின் அடிப்படையில் இந்திய ஜனநாயகக் கட்சி 2016 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை மட்டுமின்றி, மக்களின் தேவைகளுக்காக அவ்வப்பொழுது எழும் கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசு நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

தமிழக வளர்ச்சியை மட்டுமே முன்னிலைப்படுத்தி போட்டியிட உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர்களுக்கு, கத்திரிக்கோல் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.